×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

தர்மபுரி, டிச.19: தர்மபுரி மாவட்டம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதகபாடி லட்சுமி நாராயண சுவாமி கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தர்மபுரி அதகபாடி  லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் நேற்று காலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பல்லாண்டு, பாராயணம் பாடப்பட்டது. அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, உற்சவர் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி தேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு சொர்க்கவாசல் வழியாக அருளபாலித்தார். இதையடுத்து உற்சவருக்கு சங்கல்பம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில், சுமார் 25 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பழைய தர்மபுரி  வெங்கட்ரமண சுவாமி கோயிலில், அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோயில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

வெண்ணாம்பட்டி  வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபாத வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவரும், பரமபத வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கடைவீதி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடந்தது. இதே போல், பழையப்பேட்டையில் உள்ள கரியபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காரிமங்கலம் பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசலை கடந்து சென்றனர். காரிமங்கலம்:  காரிமங்கலம் மணியம்பாடி வெங்கடரமண சுவாமி கோயிலில், வடக்கு வாசல் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று அதிகாலை யாகசாலை பூஜை நடந்தது.  5 மணிக்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோபுரத்திற்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின்னர், வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : paradise ,temples ,Vaikuntha Ekadasi ,
× RELATED அம்மன் கோயில்களில் திருவிழா